Monday, January 4, 2010

சென்னை புத்தகக்காட்சி



புத்தாண்டுயன்று கோவிலுக்கு செல்வதை தவிர நான் வேறு ஒன்றும் செய்வதில்லை. ஆனால் இந்த வருடம் கோவிலுக்கும் செல்லவில்லை, ஏனென்று எனக்கும் தெரியவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் போது 33வது புத்தகக்காட்சி சென்னையில் 30ம் தேதி தொடங்குவதாக எங்கோ பார்த்த ஞாபகம். சரி அதற்கு செல்லலாம் என்று முடிவு செய்து நண்பரை தொடர்பு கொண்ட பொழுது அவரும் வருவதாக கூறினார்.

ஒவ்வொரு வருடமும் நானும் சென்னை புத்தகக்காட்சிக்கு செல்லவேண்டும் என்று எண்ணியதுண்டு. ஆனால் பொங்கல் விடுமுறையையொட்டி பத்து நாட்கள் ஊருக்கு சென்று விடுவதால், என்னால் புத்தகக்காட்சிக்கு செல்ல முடிந்ததில்லை. ஆனால் இந்த வருடம் எப்படியாவது சென்று விட வேண்டும் என்று நினைத்திருந்தேன், அது நடந்து விட்டது. (எப்பொழுதும் பொங்கல் விடுமுறையையொட்டி நடக்கும் புத்தகக்காட்சி இவ்வருடம் முன்னமே ஆரம்பித்து (பொங்கலுக்கு முன்னே) முடிந்து விடுகிறது, ஏனென்று தெரியவில்லை (யாராவது தெரிந்தால் கூறவும்)).



படங்கள் - நன்றி: சங்கர் மற்றும் ஜெட்லி

5.30 மணி போல் நாங்கள் புத்தகக்காட்சி நடக்கும் திடலுக்கு சென்று விட்டோம். பைக் பார்க்கிங் கட்டணம் என்று எதுவும் எங்களிடம் வசூலிக்க வில்லை. ஆனால் ஜெட்லியிடம் 15 ரூபாய் வாங்கியதாக தகவல். பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்ற பொழுது மேடையில் வைகோ உரையாடி கொண்டிருந்தார். நுழைவு சீட்டு வாங்குவதற்கு என்று அங்கு ஒரு ஐந்து ஆறு கவுன்டர் இருந்தது. ஆனால் எந்த கவுன்டர் சென்றாலும் பக்கத்து கவுன்டர் சென்று வாங்கி கொள்ள சொன்னார்கள். அங்கு சென்றால் அங்கேயும் அதே கதை. ஒருவழியாக கடைசி கவுன்டரில் நுழைவு சீட்டு வாங்கி கொண்டு அரங்கினுள் சென்றோம்.

முதல் முறை என்பதால் எனக்கு இன்ன புத்தகம் தான் வாங்க வேண்டும் என்று ஒரு திட்டமும் இல்லை, தவிர பாடபுத்தகங்கள் மட்டுமே நான் இதுவரை (எனக்கு) வாங்கி இருக்கிறேன் (ஹி ஹி ஹி). மற்றபடி இன்ன இன்ன எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் அவர்கள் என்ன எழுதுவார்கள், எதை பற்றி எழுதுவார்கள் என்று ஒரு ஐடியாவும் கிடையாது. அதனால் எனக்கு தெரிந்த சில புத்தகங்கள் மட்டும் வாங்கிகொண்டு வந்தேன்.

சில சுவாரசிய நிகழ்வுகள்:

1 . நண்பர் ஒரு ஸ்டாலில் (பெயர் மறந்துவிட்டது) ஆங்கில புத்தகம் ஒன்றை வாங்கினார். விலை 275 ரூபாய். நண்பர் மூன்று நூறு ரூபாய் தாள்களை கொடுத்தார். பில் போடுப்பவர் மீதி 25 ரூபாய் கொடுப்பர் என்று கையை நீட்டினால் அவர் மீதி 325 ரூபாயை திணித்தார். நாங்கள் ஐண்ணூறு ரூபாய் கொடுத்தோம் என்று நினைத்திருப்பார் போல. நண்பர் தான் முன்ணூறு ரூபாய் கொடுத்ததாக அவருக்கு நினைவுபடுத்தி மீதியை அவரிடமே திருப்பி கொடுத்தார். பில் போடுபவர் இது போல் எத்தனை பேரிடம் தவறுதலாக பணத்தை கொடுத்தார் என்று தெரியவில்லை :-(

2 .மற்ற ஸ்டால்களில் விட கிழக்கு பதிப்பகத்தில் நல்ல கூட்டம், ஏன்னென்று தெரியவில்லை. நானும் இருப்புத்தகத்தை வாங்கி கொண்டு பில் போட சென்றேன். பில் போடுபவர் ஒரு புத்தகத்தை பார்த்து நீங்கள் (அதாவது நான்) தான் இதை முதலில் வாங்குவதாக கூறினார் (நான் சென்றது மூன்றாவது நாளில்). அது கேப்டனை பற்றி யுவகிருஷ்னா (லக்கிலுக்) எழுதிய புத்தகம். நான் அவரிடம் கேப்டனுக்காக வாங்கவில்லை 'லக்கி'க்காக வாங்குவதாக சொல்லிவிட்டு வந்தேன். எனக்கு என்ன சந்தேகம் என்றால் இந்த புத்தகத்தை மூன்றாம் நாளில் நான் முதலாவதாக வாங்குவதாக கூறினார அல்லது மூன்று நாட்களுக்கும் சேர்த்து நான் தான் முதல் போனியா (ஆஆஆவ்வ்வ்வ்).

3. எல்லோரும் சாரு (கூடவே மனுஷ்யபுத்திரன்) எழுதிய புத்தகத்தை வாங்கிவிட்டு அவரிடம் (சாருவிடம்) ஒரு கையெழுத்து வாங்கி சென்றார்கள். நானும் வாங்கினேன் அவர் கையெழுத்துயை அல்ல, அவர் எழுதிய புத்தகத்தை மட்டும்.

4. சாருவிடம் ஒருவர் பேசிக்கொண்டு இருந்தார். அவரை எங்கோ பார்த்த மாதிரி (புகைப்படத்தில் தான்) இருந்தது. சற்றென்று ஞாபகம் வரவில்லை, அவர் சென்ற பிறகு தான் நினைவுக்கு வந்தது, அவர் டாக்டர் ப்ருனோ என்று. ப்ருனோ சென்ற பொழுது கூடவே ஒருவரும் சென்றார். அவர் வேறு யாரும் அல்ல, பதிவர் லக்கிலுக் தான்.

ஒரு பிரத்யேகமான தகவல்:

ஜக்குபாய் படம் நெட்டில் உலாவி கொண்டிருக்கிறது. எடிட்டிங்கில் இருந்த படத்தை நெட்டில் உலாவ விட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன். படத்தில் பின்னணி இசையே இல்லை.

2 comments:

  1. சென்னை சங்கமம் விழாவுக்கு புத்தகக் கண்காட்சியினால் பாதிப்பு ஏற்படக் கூடதென்று முன் கூட்டியே ஆரம்பித்துவிட்டதாக படித்தேன்.

    ReplyDelete
  2. தங்கள் முதல் வருகைக்கு நன்றி பின்னோக்கி.

    //சென்னை சங்கமம் விழாவுக்கு புத்தகக் கண்காட்சியினால் பாதிப்பு ஏற்படக் கூடதென்று முன் கூட்டியே ஆரம்பித்துவிட்டதாக படித்தேன்//

    ஒ...இப்படி ஒரு உள்குத்து இருக்கிறதோ...

    ReplyDelete