Monday, February 8, 2010

அசல் - எனது பார்வையில்


நானும் சில மாதங்களாக எந்த பெரிய நடிகர் நடித்த படங்களையும் முதல் வாரத்தில் பார்க்க கூடாது என்று முடிவில் இருந்தேன். நாம் நினைப்தெல்லாம் எங்கே நடக்கிறது. சில பதிவர்களின் விமர்சனத்தை 'அசல்' என்று நம்பி (உனக்கு எங்கடா போச்சு புத்தினு யாரும் கேக்காதிங்க), தலயை பார்க்க போனேன். போன என்னைய சொல்லணும். சரி அத விடுங்க..அது என் கஷ்டம்.

நாம கதைக்கு வருவோம்...அப்பா அஜித் தன் சொத்துகளை முதல் மனைவியின் மகன்களான சம்பத் மற்றும் ராஜீவ் கிருஷ்ணாவுக்கு எழுதிவைக்காமல், இரண்டாவது அல்லது சின்ன விட்டின் மகனான அஜித்துக்கு எழுதி வைத்துவிடுகிறார். இதை பொறுக்காத அவர்கள் (சம்பத் மற்றும் ராஜீவ் கிருஷ்ணா) அப்பா அஜித்தை கொன்றுவிட்டு, ஒரு மணி நேரம் கழித்து இளைய அஜித்தையும் கொன்றுவிடுகிறார்கள் (ஏன் ஒரு மணி நேரமா??? அப்ப தான்பா இடைவேளை விடமுடியும்). பின் பாதியில் மீண்டும் அஜித் உயிருடன் வந்தாரா வில்லன்களை (தன் தம்பிகளை) பலி வாங்கினாரா என்பதை படம் பார்த்து (முடிந்தால்) தெரிந்து கொள்ள(ல்ல)வும்.

கதை சொல்லியாச்சு...இப்ப அதுல நடிச்சவங்களை பத்தி பார்ப்போம்.

கதையின் நாயகன் அஜித். டைட்டிலில் அல்டிமேட் ஸ்டார் எல்லாம் போட்டு கொள்ளவில்லை. நடிக்க பெரிய வாய்ப்பு இல்லை. நடக்கிறார் நடக்கிறார் நடந்து கொண்டே இருக்கிறார் (வைகோவே தோற்று விடுவார் போல). முடியலைடா சாமி...இன்னும் எத்தனை காலம்தான் பில்லா மாதிரியே அவர் நடப்பார் என்று தெரியவில்லை. ஏற்கனவே படம் ஊர்ந்து கொண்டு இருக்கிறது. இதில் இவர் இன்னும் மெதுவாக நடந்து கொண்டு இருக்கிறார். முக பாவனைகள் காட்டவும் வாய்ப்பு இல்லை, காரணம் கூலர்ஸ். இரவு பகல் பாராமல் அணிந்து கொண்டு இருக்கிறார். வேற என்னத்த சொல்ல.


இரு நாயகிகள் - சமிரா மற்றும் பாவனா. இருவரும் அஜித்தை ஒரு 'தல'யாக காதலிக்கிறார்கள். இருவருக்கும் தனித்தனியாக இரு பாடல்கள் வேறு. கடைசியில் ஒருவர் அஜித் கைப்பிடிக்கிறார். மற்றபடி சொல்லிகொள்ளும் படி ஒன்றும் இல்லை.

இப்போ வில்லன்கள் பற்றி...சம்பத், ராஜீவ்கிருஷ்ணா, பிரதீப் ராவத், சுரேஷ் (பழைய ஹீரோ) மற்றும் கெல்லி. இதில் முதல் நால்வரும் காமெடி பீஸ்கள். பேசி கொண்டே இருக்கிறார்கள். அதிலும் அந்த சுரேஷ் மூச்சுக்கு முண்ணுறு தடவை நான் பிரெஞ்சு போலீஸ், நான் பிரெஞ்சு போலீஸ் என்று கத்தி கொண்டே இருக்கிறார். நமக்கு தான் எரிச்சலாக இருக்கிறது. கடைசியில் அவரும் நல்லவராக மாறிவிடுகிறார்.

சீரியஸ் காட்சிகளே காமெடியாக தான் இருக்கிறது. இதில் யூகிசேது வேறு. சில இடங்களில் ஓகே. பல இடங்களில் கொட்டாவி தான் வருகிறது. படத்தின் தயாரிப்பாளர் பிரபுவும் நடித்து இருக்கிறார்.

கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை அஜித்,சரண் மற்றும் யூகிசேது எழுதி இருக்கிறார்கள். மூன்று பேர் இருந்தும் திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார்கள். ஒரு passenger train போலவே மெதுவாக போகிறது. ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. ஒருவேளை இந்த படத்தை இந்தியாவில் எடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று தெரியவில்லை. இந்த படத்தை ஏன் வெளிநாட்டில் எடுத்தார்கள் என்றும் புரியவில்லை.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் சரண். சொல்வதற்கு ஒன்றும் இல்லை. பெரிய ஸ்டார், நல்ல தயாரிப்பாளர் கிடைத்தும் இவர் கவுத்து விட்டார்.

Asal @ your own Risk

ஒரு சந்தேகம்: அது என்னமோ தெரியவில்லை மாயாஜாலில் எந்த படம் பார்த்தாலும் மக்கள் ஒரே Reaction தான் கொடுக்கிறார்கள். ஒரு விசில் கிடையாது ஒரு கமெண்ட் கிடையாது. ரொம்ப டிசன்டா இருப்பாய்ங்களோ??

குறிப்பு: நான் வேற என்னத்த கேட்க போறேன், பிடிச்சு இருந்த தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க, இல்லைனா பின்னூட்டம் போடுங்க.