இருந்தாலும் இந்த காசி தியேட்டர்க்காரர்களுக்கு இந்த குசும்பு இருக்க கூடாது. படம் ஆரம்பிக்கும் பொழுது ஒரு ஸ்லைடு போட்டார்கள் பாருங்கள், என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதில் இப்படி இருந்தது 'இந்த திரைப்படம் சாட்டிலைட் மூலம் திரையிடுவதால் ஒன்ஸ்மோர் போட இயலாது'. சிரிப்பு வருமா வராதா.
சரி நாம் சுறா வுக்கு வருவோம். விஜய்-யின் ஐம்பதாவது படம். அது ஒன்று மட்டுமே இப்படத்தை முதல் நாள் பார்க்க தூண்டியது. சரி இந்த படத்திலாவது ஏதாவது வித்தியாசமாக செய்திருப்பார் என்று போனால், ஐம்பது படம் அல்ல நூறு படம் நடித்தாலும் பெரிய வித்தியாசம் இருக்க போவதில்லை (நடிப்பில் மற்றும் திரைக்கதையில்).
சமீபத்தில் வந்த படங்களில் அனைத்து காட்சிகளும் யூகிக்க முடிந்த படம் என்றால் அது சுறா வாக தான் இருக்கும் (அவர் அறிமுக காட்சி தவிர). எப்படி தான் இப்படி உக்காந்து யோசிப்பாங்களோ...தெரியல....
விஜய் வழக்கம் போல நம்மை பார்த்து வசனம் பேசுகிறார் (சம்மந்தம் இல்லாமல்), காமெடி பண்ணுகிறார், பாடுகிறார், சண்டை போடுகிறார். கடலுக்கு எப்படி எல்லை இல்லையோ, அதுபோல் வருவோர் போவோர் எல்லாம் எல்லையில்லாமல் விஜய் புராணம் பாடுகிறார்கள். நமக்குதான் காதில் ரத்தம் வருகிறது.
தமன்னா ஒரு லூசு பெண் போலவே வருகிறார் (அட அந்த கேரக்டர் சொன்னேன்). இரண்டாவது முறை விஜயை பார்க்கும் பொழுது காதல் கொள்கிறார். அதன் பின் அவர் எப்பொழுதெல்லாம் வருகிறாரோ அப்பொழுதெல்லாம் பின்னாடியே ஒரு பாடலும் வருகிறது. ஆனால் ரசிகர்கள் தான் வெளியே போய் விடுகிறார்கள், தம் அடிக்க.
வில்லன் தேவ்கில். இவ்வளவு காமெடியான டப்பிங் வில்லனை பார்க்கவே சிரிப்பாக இருக்கிறது. படம் முழுதும் விஜயை அழிக்க திட்டம் போட்டு கொண்டே இருக்கிறார். நமக்கு தான் முன்னாடியே தெரிந்து விடுகிறது. நமக்கே தெரியும் பொழுது, ஹீரோவுக்கு தெரியாத என்ன.
வடிவேலு - சில இடங்களில் சிரிப்பு, பல இடங்களில் எரிச்சல்.
விஜய் படத்தில் பாடல்கள் எல்லாம் படம் வருவதற்கு முன் ஹிட்டாகும். ஆனால் இம்முறை படம் வந்தும் கேட்க முடியவில்லை, இரண்டு பாடல்கள் (தஞ்சாவூர் ஜில்லாகாரி மற்றும் நான் நடந்தால் அதிரடி) தவிர மற்ற பாடல்கள் எல்லாம் படத்தை நேரம் கடத்த தான் உதவுகிறது. அந்த இரு பாடல்களுக்கும் ராபர்ட் தான் நடனம் அமைத்திருக்கிறார். அட்டகாசம். தஞ்சாவூர் ஜில்லாகாரி பாடலுக்கு பின் வரும் சண்டைகாட்சி படமாக்கிய விதம் மற்றும் எடிட் பண்ண விதம் , அருமை. அதை போல படம் முழுதும் வெட்டி தள்ளியிருக்கலாம்.
டைரக்டர் ராஜகுமார் பத்தியெல்லாம் சொல்ல விரும்பலப்பா.
மொத்தத்தில் சுறா - வழக்கம் போல் விஜய் ரசிகர்களுக்கு மட்டும்.
குறிப்பு: நான் வேற என்னத்த கேட்க போறேன், பிடிச்சு இருந்த தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க, இல்லைனா பின்னூட்டம் போடுங்க.